வழக்கமான வானிலை அறிவிப்பு என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். அந்தமானை கடந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை சுயயோக தினமான நவம்பர் 11ல் புயலாக மாறி கஜா என்று நாமகரணம் சூட்டப்பட்டு தமிழக கடற்கரை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்த போது, விடுமுறையை தரப்போகும் ஒரு நிகழ்வாகவே அதனை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனரே தவிர, அது உண்டாக்கவிருந்த விபரீதத்தை யாரும் கற்பனை செய்திடவில்லை. சமூக வலைதளங்கள் கஜா குறித்த வேடிக்கைப் பேச்சுக்களாலும், மீம்ஸ்களாலும் நிரம்பி வழிந்தன. பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை வருவதற்குள் வந்துவிடுமாறு கஜாவிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தனர்.
சென்னைக்கும் கடலூருக்கும் இடையில் என்ற முதல் கட்ட அறிவிப்பு பின்னர் கடலூருக்கும் நாகைக்கும் இடையில் என்று மாற்றப்பட்டு, இறுதிக் கட்டத்தில் நாகைக்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் புயல் கரையை கடக்கும் பகுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வர்தா புயல் தந்த அனுபவத்தைக் கொண்டு அரசாங்கம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததை யாரும் மறுக்க இயலாது.

Fundraiser for Cyclone Gaja Relief

We ask the GCTS community to contribute generously to this cause. No amount is small, we urge everyone to give something at this time of need.

நவம்பர் 15 ஆம் நாள், காலையில் வருகிறான் கஜா, மதியம் வருகிறான், இதோ மாலை வந்துவிடுவான் என்று புதுப்பட பெட்டி வருவது போல், மக்கள் எப்போது என்று ஆவலோடு காத்திருந்தார்கள். மதியம் வரை அடித்த வெயில் வானிலை ஆராய்ச்சி நிலையம் குறித்த அவநம்பிக்கையை பலருக்குள்ளும் விதைத்தது. மாலை வரை மழை வருவதற்கான அறிகுறிகள்கூட இல்லை. வானிலை அறிவிப்பு மட்டும் இதோ நெருங்கிவிட்டது என்று மணிக்கொருமுறை எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தது. புயல் குறித்த ஆர்வம் இழந்து பெரும்பாலான மக்கள் தூங்கச் சென்ற நள்ளிரவு நேரத்தில் கஜாவின் கரை கடக்கும் படலம் தொடங்கியது. அதுவரை தெளிவாக இருந்த வானம் அணை திறந்தாற்போல் மழையைப் பொழிய தொடங்கியது. கூடவே சூறைக் காற்று. மணிக்கு 100 முதல் 120 கிமீட்டர் வேகம் என்று கணிக்கப்பட்டது, கணிப்புகளை பொய்யாக்கி 140 கிமீட்டர் வேகத்தைக் கடந்து வீசத் தொடங்கிற்று. அந்த ஆக்ரோஷ வேகம் அதுவரை கஜா புயல் குறித்து மக்களிடத்தில் இருந்த விளையாட்டு எண்ணங்களைப் போக்கி, பயத்தை உண்டாக்கத் தொடங்கியது.

நகரங்கள், கிராமங்கள் எல்லாம் மின்சாரம் இன்றி கும்மிருட்டில் மூழ்கின. என்ன நடக்கின்றது என்பதை எட்டிப் பார்க்கக்கூட இயலாதவாறு இருட்டு, வெளியில் சென்றால் பறந்துவிடுவோம் என்பது போன்ற காற்று. ஓரளவிற்கு பாதுகாப்பான வீடுகளில் இருந்தவர்கள் உள்ளேயே முடங்கிக் கொண்டார்கள். ஓட்டு வீடுகளிலும், குடிசை வீடுகளிலும் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் அல்ல, இரண்டு மணி நேரம் அல்ல, கிட்டத்திட்ட ஆறு மணி நேரம் கஜா ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். விடியல் பொழுதில்தான் பலரும் தங்களது அஸ்தமனத்தை கண்டார்கள். எல்லாமே  இழந்து  இருப்பதை அவர்கள் உணரவே சற்று நேரம் எடுத்தது. ஆறுதலுக்கென எங்காவது ஏதாவது ஒன்று இருக்கின்றதா என்று தேடிக் களைத்த பின்னர்தான், எல்லாமே போய்விட்டிருக்கும் உண்மை அவர்களுக்கு உரைக்கின்றது.

வேதாரணியம் தாலுக்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை ஒட்டுமொத்தமாய் புரட்டிப் போட்டுவிட்டது இந்த கஜா புயல். சிரச்சேதம் செய்யப்பட்ட வீடுகள், ஊனமுற்ற தென்னைகள், உயிரைத் தொலைத்த வீட்டுப் பிராணிகள், வேரோடு வீசி ஏறியப்பட்ட மரங்கள், உருக்குலைந்த சாலைகள் இதைத்தான் வழியெங்கும் காண முடிகின்றது. இவற்றுக்கு மத்தியில் உடைமைகளை இழந்து என்ன செய்வதென்றே அறியாது, அழவும் இயலாது பரிதவித்து நிற்கும் மனிதர்கள்.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அதிலும் பயிர் விவசாயத்தைவிட முந்திரி, மா, தென்னை என்று மரங்கள் வளர்த்து அதன் மூலம் தங்களுக்கான வருவாயை ஈட்டி வந்தவர்கள். ஒவ்வொரு மரத்தையும் பிள்ளைகளைப் போன்று பார்த்து பார்த்து வளர்த்தவர்கள். சில மணி நேரங்களில் ஒட்டு மொத்தமாய் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள்.
பெற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, கல்லூரி முடிக்கும் பருவத்தில் விபத்தில் அவர்களை இழந்தால் ஒரு பெற்றோர் எவ்வளவு துயரப்படுவார்களோ அதே மனநிலையில்தான் இன்று இந்தப் பகுதி மக்கள் இருக்கின்றார்கள். இழந்தது வீடு மற்றும் உடைமைகள் என்றால்கூட அவற்றை உடனே கொண்டு வந்துவிடலாம். 20, 30 வருடங்களாக கண் இமைபோல் பாதுகாத்து வளர்த்த மரங்களை மீண்டும் கொண்டுவருவது எக்காலத்தில்? பூத்துக் காய்த்து பலனளிக்கும் மரங்களைப் பார்த்து, இது நான் வைத்த மரம் என்று பெருமிதம் கொண்ட பெரியவர்கள் எல்லாம், இனி என் காலத்தில் மரங்களை பார்க்க இயலாது என்று வேதனையை வெளிப்படுத்துகின்றார்கள். இதுவரை பசுமை காடுகளாய் இருந்த கிராமத்து தோட்டங்கள் எல்லாம், வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றியபின் வெறும் திடல்களாய் காட்சியளிக்கப் போகின்றது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களை இரண்டுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிறிய வீடு, குடிசை வீடு, சொந்தமாய் நிலம் இல்லாதவர்கள் அல்லது சிறிய நிலத்திற்கு சொந்தக்காரர்கள், ஒன்றிரண்டு ஆடு மாடு வைத்திருப்பவர்கள் என்ற அடித்தட்டு மக்கள் ஒரு பிரிவினர். இவர்கள் இழந்தது மதிப்பில் குறைவாக இருந்தாலும், ஒட்டு மொத்தமாய் இழந்திருப்பவர்கள்.

உடனடி தேவைகளாக உணவில் தொடங்கி ஒதுங்க ஒரு இடம் வரை அனைத்தும் இவர்களுக்கு தேவை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்கள் இழந்தவற்றை மீண்டும் பெற்றுவிட வாய்ப்புள்ளது.

இரண்டாவது பிரிவினர், மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள்தான் இந்த பகுதிகளில் அதிகம். பாதுகாப்பான வீடுகளில் வசித்தாலும், இவர்களுடைய இழப்பு மிக அதிகமாக இருக்கின்றது. பெரும்பாலானவர்கள் மரங்களை வாழ்வாதாரமாக நம்பி இருப்பவர்கள். இவர்களால் வெளியில் சென்று உதவி கேட்கக்கூட முடியாது. அரசாங்கம் தரும் மரத்திற்கான இழப்பீடு எந்த விதத்திலும் இவர்களது இழப்பைச் சீர் செய்துவிடாது.

இதில் இருந்து அவர்கள் மீண்டு வர நிறைய காலம் எடுக்கலாம். மற்றவர்கள் எல்லாம் நிவாரணம் வாங்குவதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் எதிர்காலம் குறித்த கவலையில் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருகின்றவர்கள், உணவும் உடையும் தேவையுள்ளவர்களுக்கு மட்டும் உதவுவதோடு நின்றிடாமல், இந்த இரண்டாவது பிரிவினரின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ஏதேனும் செய்ய இயலுமா என்பதையும் யோசிக்க வேண்டும். மாற்று விவசாயம், ஹைடெக் விவசாயம் போன்றவற்றில் பயிற்சி அளித்து, அதன் மூலம் அவர்கள் பொருள் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.

பொருளாய் கொடுப்பது தற்காலிக தீர்வு மட்டுமே. பொருள் ஈட்ட வாய்ப்புகள் கொடுப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

உதவ முன்வருவீர்களா?

— வெங்கடேஸ்வர பாபு

(தமிழ்நாட்டில் இருந்து நம் சங்க உறுப்பினரின் உறவினர்)