இந்த படைப்பை எழுதியவர்: 
– நாகராஜன் ராஜேந்திரன்

வசந்தகாலம் வண்ணமயமாய் நம் தமிழ் பள்ளியில் வரவேற்கப்பட்டது. வசந்த விழாவை அலங்கரித்த எங்கள் பள்ளி நட்சத்திரங்களுக்கும் அவர்களை பிரகாசிக்க வைத்த அருமை பெற்றோர்களுக்கும் எங்கள் நன்றி ! 

நன்றி என்ற ஒரு வார்த்தையில் முடிவதல்ல இந்த கொண்டாட்டங்களும் நம் உறவும் வாழையடி வாழையாக தொடரட்டும் ! 

மார்ச் 2 ஆம் தேதி
எங்கள் மழலை செல்வங்களின் வார்த்தை ஜாலங்களில் வார்த்தை தேனியாய் துவங்கியது.
அருமையான பல சொற்கள் (தற்பொழுது பழக்கத்தில் இல்லாததால்) பெரியவர்களுக்கும் , நடுவர்களுக்கும் கூட புதிதாய் தோன்றின. நம் குழந்தைகள் அதை நினைவில் கொண்டு உச்சரித்த விதம் அருமை. அவர்களின் மொழி பெயர்ப்பு திறமை பின்வருமாறு :

சிலர் அருவியாய் கொட்டினர்
சிலர் ஓடை போல் ஓடினர்
சிலர் மயில் போல் நடமாடினர்
சிலர் குயில் போல் கூவினர்

மொத்தத்தில் ஒவ்வொருவரின் ஈடுபாடும் அருமை. நாம் கூறும் விளக்கங்களை ,புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள அவர்கள் காட்டிய ஆர்வமும் அற்புதம்.
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று பெரியவர்கள் கலந்து கொண்ட கட்டுரை போட்டிகள் . அவர்கள் வடித்த ஒவ்வொரு கட்டுரையும் கருத்து களஞ்சியங்கள். மிக அருமை!!!

மார்ச் 9 ஆம் தேதி
வருணன் கூட நாம் வரும் முன் நமக்காக நம் கிள்ளை மொழிகளை கேட்டு ரசிக்க வந்து விட்டான். விழா முடிந்தும் விலகி செல்ல மனமின்றி தங்கிவிட்டான்.
ரம்மியமான மாலை பொழுது
காதிற்கு இனிய மொழியில் நம் முல்லைகளின்

கொஞ்சு தமிழில் தெய்வ புலவன் திருவள்ளுவரின் குறள்…
அவர்கள் அதை தெளிவாக உச்சரிக்க எடுத்த சிரத்தை அருமை
அவற்றிக்கு அவர்கள் கொடுத்த விளக்கங்களும் இனிமை

போட்டி முடிந்தும் நடுவர்களுடன் அன்புடன் அவர்கள் கொண்ட உரையாடல்கள் , திருக்குறள்பால் அவர்கள் கொண்ட ஈடுபாடு புதுமையிலும் புதுமை

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழழை சொல் கேளாதோர்
மடை திறந்த வெள்ளம் போல் அவர்கள் தங்கள் வார்த்தை ஜாலங்களில்
அன்னையை
தனக்கு பிடித்த உணவினை
தான் ரசித்த இடங்களை
தாய் தமிழ் பெருமைகளை
சமுதாய சிந்தனை கருத்துக்களை
தங்களுக்கே உரிய பாணியில் அவர்கள் வழங்கிய விதம் அருமையோ அருமை
கேட்டவர் அனைவரும் காதில் தேனருவி பாய்ந்தது போல் திளைத்தனர்.

போட்டிகள் முடிந்த பின்னரும் அனைவரும் ஆர்வமுடன் நன்றி நிகழ்வில் கலந்து கொண்டது நம் தமிழ் மரபின் பெருமையை பறைசாற்றியது.